இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


அலைக்கற்றை முகாமைத்துவத்திற்கு வரவேற்றல்

அலைக்கற்றை முகாமைத்துவம் தொடர்பான அறிமுகம்

வானொலி தொழிநுட்பங்கள் தடைகளற்ற பரந்த வெளியில் தகவல்களை கடத்துவதற்கு மின்காந்த அலைகளையே பயன்படுத்துகின்றன. வித்தியாசமான அதிர்வெண் அலைகளைப் பிரயோகிப்பதன் மூலம் பல்வேறு வித்தியாசமான வானொலிப் பயன்பாடுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். வானொலி அலைக்கற்றையானது 3kHz மற்றும் 300GHz க்கிடையிலான அதிர்வெண்களில் மின்காந்த அலைக்கற்றையின் ஒரு பகுதியாகவே வரையறுக்கப்படுகின்றது.

வானொலி அதிர்வெண் அலைக்கற்றையானது தொலைத்தொடர்பாடல்கள், ஒலிபரப்பு, இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி என்பவற்றில் மாத்திரமன்றி சமூக விஞ்ஞானங்கள், சட்ட அமுலாக்கம், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, போக்குவரத்து போன்ற ஏனைய சமூகப் பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாக பிரயோகிக்கப்படுவதால் அது பொருளாதார பெறுமதியுடன் கூடிய நாட்டின் மிகவும் முக்கியமான இயற்கை வளங்களில் ஒன்றாகும். எனவே, அதிகமான தொழிற்துறைகள் வானொலி அதிர்வெண் அலைக்கற்றையின் வினைத்திறன்மிக்க பயன்பாட்டில் அதிகளவு தங்கியுள்ளன.

அலைக்கற்றை முகாமைத்துவம் என்பது ஏனைய வானொலி முறைமைகளின் தொழிற்பாட்டிற்கு தடங்கலை ஏற்படுத்தாது வானொலி தொடர்பாடல் உபகரணங்கள் மற்றும் சேவைகளின் பயனுறுதிவாய்ந்த தொழிற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நிர்வாக மற்றும் தொழிநுட்பச் செயன்முறைகளின் இணைப்பாகும்.

இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பானை

இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 10(அ) ஆம் பிரிவின் கீழ், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவே வானொலி அதிர்வெண் அலைக்கற்றையின் பயன்பாடு மற்றும் நிலையான செய்மதி சுற்றுப்பாதையுடன் தொடர்புடைய விடயங்களை நிர்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான இலங்கையின் ஒரே சட்டபூர்வமான நிறுவனமாக இருப்பதோடு அவசியமென கருதப்படுமிடத்து அதன் பயன்பாட்டினை திரும்பப் பெறவோ அல்லது இடைநிறுத்தவோ அல்லது அதிர்வெண்களின் அத்தகைய பயன்பாட்டினை தடுப்பதற்கோ பூரண அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வானொலி அலை தகவல் தொடர்புச் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு உரிமங்களை வழங்குவதும், வானொலி அலைக்கற்றைகளை பாதுகாப்பதும் வானொலி அலை தொடர்பாடல்களின் நிறுவல்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்காந்த கோளாறுகளை குறைப்பதற்காக விதிமுறைகளுடன் இணங்கியொழுகுவதை நடைமுறைப்படுத்துவதும் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் தொடர்பாடல் ஆணைக்குழுவில் வானொலி அலைக்கற்றையின் வினைத்திறன்மிக்க நிர்வாகத்திற்கு அலைக்கற்றை முகாமைத்துவப் பிரிவே பொறுப்பாகும்.
அலைக்கற்றை முகாமைத்துவ பிரிவு கீழே குறிப்பிடப்படுகின்ற தொழிற்பாடுகளை நிறைவேற்றுகின்றது.

  • சர்வதேச வானொலி விதிமுறைகள் மற்றும் தேசிய முன்னுரிமைகளுக்கேற்ப அதிர்வெண் பட்டைகளை ஒதுக்குதல்.
  • நியாயமான, சமமான மற்றும் வெளிப்படைத்தன்மையான செயன்முறைகளினூடாக அதிர்வெண்களை ஒதுக்கீடு செய்தல்.
  • அதிர்வெண்களின் பயன்பாட்டினை திட்டமிடுதல், ஒருங்கிணைப்புச் செய்தல், ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பணிகளை நிறைவேற்றுதல்.
  • வானொலி அலைக்கற்றையின் பயன்பாடு மற்றும் நாட்டிற்குச் சொந்தமான செய்மதி சுற்றுப்பாதையின் பயன்பாடு ஆகிய இரண்டையும் நிர்வகிக்கும் விதிமுறைகள், தொழிநுட்ப சாராமாறிகள் மற்றும் தராதரங்களை நிறுவுதல்.
  • வானொலி அலை தொலைத்தொடர்பு உபகரணத்திற்குரிய தொழிநுட்ப தராதரங்களை வரையறுத்தல்.
  • நாட்டின் சமூக பொருளாதார இலக்குகளை எய்துவதற்கு பல்வேறு சேவைகளின் ஒப்பீட்டு ரீதியான முக்கியத்துவத்தினைக் கருத்திற்கொண்டு அவற்றுக்கு போதுமான வழங்கல்களை ஒதுக்கீடு செய்வதற்காக அலைக்கற்றையை நிர்வகித்தல்.
  • ஏனைய பயனாளர்களுடன் குறைவான குறுக்கீட்டினை உறுதிப்படுத்துவதற்காக அலைக்கற்றையின் பயன்பாட்டினை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பயனாளர்களுக்கு உரிமங்களை வழங்குதல்.
  • வானொலி அலை மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் முனைய உபகணரங்களுக்கு (RTTE) மாதிரி அங்கீகாரத்தினை வழங்குதல்.
  • வானொலி அலை தொடர்பாடல் நிலையங்களின் உரிமத்தில் விதந்துரைத்துள்ளவாறு தொழிநுட்ப தராதரங்கள் மற்றும் சாராமாறிகளுக்கேற்ப அவற்றின் தொழிற்பாடுகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அந்நிலையங்களில் உரிம இணக்க ஆய்வுகளை நடாத்துதல்.
  • வானொலி அதிர்வெண்களின் பயன்பாட்டிற்காக பிராந்திய மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டொத்துழைப்புக்களை நிர்வகித்தல்.
  • அதிர்வெண்கள், இடங்கள், கடத்தும் சக்திகள், அழைப்பு அறிகுறிகள் போன்ற அதிகாரம்பெற்ற வானொலி முறைமைகள் தொடர்பாக தகவல் தரவுத்தளம் ஒன்றை நிர்வகித்தல், மற்றும் ஏனைய நாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள் இருந்தால் சர்வதே தொலைத்தொடர்பாடல் ஒன்றியத்தின் (ITU) வானொலி தொடர்பாடல் பணிமனைக்கு அறிவித்தல்களை வழங்குதல்.
  • வளர்ந்துவரும் தொழிநுட்பங்கள் மற்றும் புதிய சேவைகளுக்கு இடமமைத்து கொடுக்கும் வகையில் புதிய அலைக்கற்றை இடத்தை விடுவிப்பதற்காக காலங்கடந்த வானொலி தொடர்பாடல் சேவைகளை கட்டங்கட்டமாக விடுவிக்கும் அலைக்கற்றை மீள்-ஒதுக்கீடுதல் செயன்முறையை நடைமுறைப்படுத்துதல்.
  • அங்கீகரிக்கப்பட்ட உமிழ்வுகளின் இணக்கத்தன்மை மற்றும் தடையற்ற பயன்பாட்டினை உறுதிப்படுத்துதல், இடையூறுகளின் ஆரம்பத்தை இனங்கண்டு அதனை சரிசெய்தல்.
  • அலைக்கற்றைப் பயன்பாட்டிற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை அறவிடுதல்.
  • உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பு (GMDSS) பரீட்சைகளை நடாத்துதல்.