இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


அலைக்கற்றைக் கண்காணிப்பு

நாடு முழுவதிலும் அலைக்கற்றைப் பயன்பாடானது உரிமங்கள் மற்றும் தொழிநுட்ப தராதரங்களுடன் இணக்கமாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வழமையான அதிர்வெண் கண்காணித்தலை மேற்கொள்கின்றது. இதன் மூலம் அனுமதியற்ற வெளிவிடுதல்கள் மற்றும் தடைகளை அடையாளப்படுத்தி, கண்டுபிடித்து பிரச்சனைகளை தீர்க்கக்கூடியதாக இருப்பதுடன், தொழிற்பாடு மற்றும் தொழிநுட்ப ரீதியான சாராமாறிகளை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

ஏனைய வானொலி தொடர்பாடல் முறைகளிலிருந்து உரிமம்பெற்ற வானொலி தொடர்பாடல் முறைமைகளுக்கு இருக்கும் தடைகள், முட்டுக்கட்டைகள், தற்செயலான வெளிவிடுதல்கள் அல்லது செயல்திறன்மிக்க மின்னணு கருவிகள் மற்றும் வலைப்பின்னல்கள் ஆகியவற்றை புலனாய்வு செய்யும் அதிகாரம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

உரிமங்கள் வழங்கப்பட்ட பிறகு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை குறித்த உரிமத்தின் குறிப்பீட்டு நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைவாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

அலைக்கற்றை கண்காணித்தலில் கீழே குறிப்பிடப்படுகின்ற குறிக்கோள்கள் பூர்த்திசெய்யப்படுகின்றன.

  • அனுமதிக்கப்பட்ட பயனாளர்கள் தமது உரிமங்களின் குறிப்பீட்டு நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக வானொலி தொடர்பாடல் உபகரணங்களை இயக்குகிறார்களா என்பதை சரிபார்த்தல்.
  • அலைக்கற்றையானது எதிர்கால பயன்பாடுகளுக்கும் செயல்வலு நிலையில் இருக்குமா என்பதை மதிப்பீடு செய்து உண்மையான அலைக்கற்றைப் பயன்பாட்டினை தீர்மானிப்பதன் மூலம் அலைக்கற்றையின் வினைத்திறனை மேம்படுத்துதல்.
  • அலைக்கற்றை வளங்களால் சமூகத்திற்குக் கிடைக்கும் நலன்களை உச்சப்படுத்தி வானொலி அதிர்வெண் அலைகள் கடத்தப்படுகின்ற மற்றும் பெறுகின்ற சூழலை வடிவமைத்து அதனை தொடர்ந்து பேணுவதற்காக அலைக்கற்றை தேசிய அலைக்கற்றை முகாமைத்துவ ஒழுங்குவிதிகளுடன் இயைபாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துதல்.
  • பாதகமேற்படுத்தும் தடைகளிலிருந்து தற்போது முறைமையிலுள்ள அலைக்கற்றைகளைப் பாதுகாப்பதோடு புதிய அலைக்கற்றைகளுக்கு தேவயான வசதிகளை அமைத்துக்கொடுத்தல்.
  • ஏனைய உரிமம் பெற்ற பயனாளர் அல்லது அங்கீகாரம் பெறாத பயனாளர்களின் வெளிவிடுதல்களால் ஏற்படும் வானொலி இடையூறு தொடர்பான முறைப்பாடுகளை பரிசீலனை செய்தல்.
  • திசைகளைக் கண்டுபிடித்தல் மற்றும் சமிக்ஞை பகுப்பாய்வினூடாக அனுமதியற்ற முறையில் அல்லது சட்டத்திற்கு முரணாக அலைக்கற்றைகளைப் பயன்படுத்தும் இடங்களை இனங்காணல்.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கண்காணித்தல் வசதிகள்

10 kHz முதல் 24 GHz வரையிலான பல்வேறு அதிர்வெண் பட்டைகளில் அதிர்வெண் அலைக்கற்றையை வினைத்திறனுடன் கண்காணிக்கும் நோக்கில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு நிலையான மற்றும் நடமாடும் கண்காணிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது. அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிநவீன கண்காணிப்பு வன்பொருள் மற்றும் மென்பொருள் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதற்காக அலைக்கற்றையின் மீள்பயன்பாட்டு விளைவுகள் மற்றும் பட்டையை விடுவித்தல் உள்ளடங்கலாக அலைக்கற்றைப் பயன்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து திரட்டப்படுகின்ற கண்காணிப்புத் தரவுகள் அலைக்கற்றை பொறியியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். இங்கு தாங்குதிறன் மட்டங்களின் சரிபார்ப்பு, பட்டைப் பகிர்வு மூலோபாயங்களின் சாத்தியமான இடையூறு மற்றும் விருத்தியை தீர்மானித்தல் என்ப உள்ளடங்கும்.

தடைக்கு தீர்வுகாணல்

அலைக்கற்றைக் கண்காணிப்புச் செயன்முறையானது வானொலி அலைகள் மற்றும் உரிமம் பெற்ற வானொலி தொடர்பாடல் முறைமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் கதிர்வீச்சு ஆகியவற்றின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றது. அனுமதிபெற்ற, உரிய முறையில் உரிமம்பெற்ற சமிக்ஞை வானொலி அலைகள் உருவாக்கும் தேவையற்ற அதிர்வெண்களாலும் இத்தகைய இடையூகள் ஏற்படலாம். அத்துடன், தொழிநுட்ப விபரக்கூற்று விவரங்களுக்கு அப்பால் இயங்குகின்ற அனுமதிபெறாத அலைபரப்பிகள் அல்லது வானொலி உபகரணங்களும் இத்தகைய குறுக்கீடுகளுக்கு காரணமாக இருக்கலாம்.

அங்கீகாரம்பெற்ற ஒரு பயனாளர் ஒருவர் ஏனைய வானொலி முறைமைகளிலிருந்து பாதகமான இடையூறுகளை எதிர்கொண்டால் அது பற்றி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை தாக்கலிட வேண்டும். முறைப்பாட்டுப் படிவம் உரிய முறையில் பூர்த்திசெய்யப்பட்டிருத்தல் வேண்டும். இடையூறு தொடர்பான பகுப்பாய்விற்கு உதவும் விதத்தில் முறைப்பாட்டாளர் முறைப்பாட்டினைத் தாக்கலிடும் போது அது தொடர்பான தொழிநுட்ப தரவுகளை சமர்ப்பிக்குமாறு தேவைப்படுத்தப்படலாம். அவ்வாறு தேவைப்படுத்தப்படும் தரவுகளை சமர்ப்பிக்காத போது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பாதகமான இடையூறுகளை பகுப்பாய்வு செய்ய முடியாதிருக்கும்.

இடையூறு அல்லது குறுக்கீடு தொடர்பான அனைத்து முறையீடுகளும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அலைக்கற்றை பிரிவில் இருக்கின்ற பிரத்தியேகமான விண்ணப்பப் படிவத்தினைப் பயன்படுத்தி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். குறித்த விண்ணப்பப்படிவத்தினை ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் கண்காணிப்பினை நடாத்தி குறித்த இடையூறுகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கண்காணிப்புப் பெறுபேறுகளையும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பாதிக்கப்பட்ட பயனாளிக்கு அறிவிக்கும்.