இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


அலைக்கற்றை திட்டமிடல்

அலைக்கற்றை பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு புதிய சேவைகளும் அறிமுகமாகின்றன. தொழிநுட்பத்திலேற்படும் துரித மாற்றங்களுக்கு இணைவாக அலைக்கற்றைப் பயன்பாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது சவாலானது. எனவே, இச்சவால்களுக்கு முகங்கொடுக்கும் விதத்தில் மிகவும் கவனமாக அலைக்கற்றை திட்டமிடல் செயன்முறையை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

சர்வதேச உடன்படிக்கைகள், தொழிநுட்ப சிறப்பியல்கள் மற்றும் அலைக்கற்றையின் பல்வேறு பாகங்களின் பயன்பாடு, மற்றும் தேசிய முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றுடன் இணங்கும் விதத்தில் குறிப்பான ஒரு சில பயன்பாடுகளுக்காக அலைக்கற்றை அதிர்வெண்ணின் பாகங்களை ஒதுக்கீடு செய்யும் செயன்முறையை அலைக்கற்றை திட்டமிடல் உள்ளடக்கும்.

அலைக்கற்றை திட்டமிடலானது வானொலி அலை தொடர்பாடல் சேவைகளின் விருத்திக்கு ஆதரவளிப்பதோடு வானொலி அதிர்வெண்களின் புதிய பயன்பாட்டு முறைகளுக்கு இடமளிக்கும். அத்துடன், சமகால பயனாளர்களுக்கு தற்போது செயன்முறையிலிருக்கும் வானொலி அதிர்வெண்களிலிருந்து உச்ச பயனைப் பெறுவதற்கு அனுமதிக்கின்றது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அலைக்கற்றை திட்டங்களை வகுக்கும் போது சமூகத்தின் மாற்றத்திற்குள்ளாகும் தேவைகளில் கவனம் செலுத்துவதுடன், தொழிநுட்பத்தின் புத்தாக்க பயன்பாடுகளினூடாக தற்போதிருக்கும் தேவைகளை புது அம்சங்களுடன் இணைப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றது.

தேசிய அதிர்வெண் ஒதுக்கீடு அட்டவணை (NFAT)

வானொலி அலை ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பாக சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ITU) 5 ஆம் உறுப்புரையின் சர்வதேச அதிர்வெண் ஒதுக்கீடுகள் எனும் எண்ணக்கருவிலிருந்தே தேசிய அதிர்வெண் ஒதுக்கீடு அட்டவணை பெறப்பட்டது. அது பிராந்திய ரீதியிலான ஒதுக்கீடுகளுடனும் இயைபாக இருத்தல் வேண்டும். வானொலி ஒழுங்குபடுத்தல்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஒரு முறை இடம்பெறுகின்ற சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக வானொலி தொடர்பாடல் மாநாட்டினால் (WRC) திருத்தப்படுகின்றன. தேசிய அதிர்வெண் ஒதுக்கீடு அட்டவணையானது இலங்கைக்கென ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து அதிர்வெண் பட்டைகளையும் குறிப்பாக அந்தப் பட்டைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சேவைகளையும் எடுத்துக்காண்பிக்கும்.