அதிர்வெண் ஒதுக்கீடுகள்
அதிர்வெண் ஒதுக்கீடு என்பது அலைக்கற்றை பொறியியல் அடிப்படைகள் மற்றும் தேசிய ஒழுங்குபடுத்தல் கொள்கைகளுக்கேற்ப பொருத்தமான வானொலி அதிர்வெண்கள் மற்றும் அலைவரிசைகளை இனங்காண்பதாகும். தொடர்புடைய வானொலி உபகரணங்களை சேவையிலீடுபடுத்துவதற்கு பொருத்தமானதொரு உரிமம் இந்த ஒதுக்கீட்டிற்கு அவசியமாகும்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வானொலி அலைகளின் பரவல் பிரமாணங்கள், நிரப்பரப்பமைப்பு தரவுத் தளம் மற்றும் ஏனைய நிர்வாக தரவுத்தளம் என்பவற்றை பயன்படுத்தும் அதிநவீன அலைக்கற்றை முகாமைத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி வினைத்திறனுடனும் விளைத்திறனுடனும் அதிர்வெண்களை ஒதுக்கீடு செய்கின்றது.
இவ்வாறான அதிர்வெண் ஒதுக்கீடானது குறிப்பானதொரு அதிர்வெண்ணில் குறிப்பிட்டதொரு இடத்தில் இயங்கும் வானொலி தொடர்பாடல் நிலையத்துடன் தொடர்புபடுத்தப்பட்டதாக இருப்பதுடன், அதிகபட்ச வலு, அதிகபட்ச உயரம் மற்றும் வானலை வாங்கியின் அடிப்படைக்கூறுகளுடன் தொடர்புடைய குறிப்பீட்டு நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும்.
வானொலி அதிர்வெண் அலைக்கற்றையின் ஒதுக்கீட்டிற்கான கொள்கைகள் மற்றும் பிரமானங்களின் விருத்திக்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொறுப்பாக இருக்கின்றது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கொள்கை
- அதிர்வெண்களை ஒதுக்கீடு செய்யும் செயன்முறை திறந்ததாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இருப்பதோடு, அச்செயன்முறையில் பயனாளர்களுக்கு பாரபட்சம் காட்டப்படமாட்டாது.
- ஒட்டுமொத்த உரிமம் தொடர்பான செயன்முறைக்கு ஆதரவளிக்கும் விதத்தில் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டு பிரமாணங்களுக்கு அமைவாக அதிர்வெண் ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
- தேசிய அதிர்வெண் ஒதுக்கீடு அட்டவணைக்கு அமைவாக அனைத்து பயனாளர்களுக்கும் அதிர்வெண் ஒதுக்கீடுகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
- அலைக்கற்றையின் பயன்பாட்டுக்கான கேள்வியானது வழங்கலை விட மிகைக்காத சந்தர்ப்பங்களில் அதிர்வெண்களை ஒதுக்கீடு செய்வதற்கு மிகவும் சாதாரண நிர்வாக செயன்முறை நடைமுறைப்படுத்தப்படும். முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அதிர்வெண்கள் ஒதுக்கப்படும்.
- பற்றாக்குறை மற்றும் வழங்கலை விட கேள்வி மிகைக்கும் சந்தர்ப்பங்களில் ஏலம் அல்லது விலைமனு கோரல் அல்லது அலைக்கற்றை வர்த்தகம் போன்ற சந்தையை மையப்படுத்திய அலைக்கற்றை முகாமைத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி பயனாளர்களுக்கு உயர் பெறுமதிமிக்க அலைக்கற்றைகள் வழங்கப்படும்.
அதிர்வெண் ஒருங்கிணைப்பு
அதிர்வெண் ஒருங்கிணைப்பு என்பது, தமது வானொலி இயக்கத்திற்கு ஒரே வகையான அதிர்வெண்ணை பயன்படுத்துகின்ற வெவ்வேறு வானொலி முறைமைகளுக்கிடையில் நிகழும் இடையூறுகளை நீக்குவதற்காக/ குறைப்பதற்கான தொழிநுட்ப மற்றும் ஒழுங்குபடுத்தல் செயன்முறையாகும்.
பல்வேறு பயனாளர்கள் மற்றும் சேவைகளால் பகிரப்படுகின்ற அதிர்வெண்கள் ஒத்திசைவான அதிர்வெண்களாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தேசிய அதிர்வெண் ஒருங்கிணைப்பினை செயற்படுத்துகின்றது.
அண்டை நாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய அதிர்வெண் ஒதுக்கீடுகள், ஏனைய நாடுகளுடனான ஒருங்கிணைப்புக்காக சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் வானொலி தொடர்பாடல் பணிமனைக்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பின்னர் முதன்மை சர்வதே அதிர்வெண் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன.