இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


அதிர்வெண் உரிமம்

உரிமம் என்பது ஒரு வானொலி அலை தொடர்பாடல் உபகரணத்தை அல்லது ஒரு வானொலி தொடர்பாடலை இயக்குவதற்காக அனுமதி வழங்கும் ஒரு தலைப்பட்சமான செயன்முறையாகும். அதனை ஒரு ஒப்பந்தமாவோ அல்லது இரு தரப்பு உடன்படிக்கையாகவோ கருதப்பட முடியாது. வானொலி உபகரணத்தின் பயன்பாட்டிற்கு சட்டத்தின் 22(2) (ஆ) இன் கீழ் பயனாளர் வகைக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தாலே அன்றி உரிய கட்டணத்தை செலுத்தி உரிமத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம். ්

வானொலி அலைக்கற்றையின் சிக்கனமான இயலாற்றலை முடியுமான வரை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்திலேயே உரிமம் வழங்கும் செயன்முறைகள் மற்றும் நிபந்தனைகள் விருத்தி செய்யப்பட்டுள்ளன.

வானொலி தொடர்பாடல் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் செயன்முறை

வானொலி தொடர்பாடல் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் செயன்முறை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

  1. பொருத்தமான விண்ணப்பப்படிவத்துடன் துணை ஆவணங்களையும் இணைத்து வானொலி அலைக்கற்றை உரிமத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அலைக்கற்றைக் கட்டணங்களின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள உரிமம் கட்டணத்தை செலுத்தி அதன் பற்றுச் சீட்டுடன் அனைத்து விண்ணப்பப் படிவங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  2. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு விண்ணப்பம் கிடைத்ததை எழுத்து மூலம் அறிவிக்கும்.
  3. தேவைப்படுத்தும் பயன்பாடானது இலங்கையின் தேசிய அதிர்வெண் ஒதுக்கீட்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வானொலி தொடர்பாடல் சேவைகளுடன் இணங்க வேண்டும்.
  4. விண்ணப்பம் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகளுடன் இணக்கமாக உள்ளதா என்பதை உறுதுதிப்படுத்துவதற்காக தேசிய அதிர்வெண் ஒதுக்கீ்ட்டு அட்டவணையுடன் சரிபார்க்கப்படும்.
  5. குறித்த விண்ணப்பதாரி, தேவைப்படுத்தும் தொழிநுட்ப அளவுருக்களுக்கு இணங்க தேவையான தகுதி வரம்புகளை பூர்த்திசெய்கிறாரா என்பதை உறுதிப்படுத்தவும் கோரிக்கை விடுக்கும் அதிர்வெண் தற்போது தேசிய ரீதியாக காணப்படுகின்ற அதிர்வெண் ஒதுக்கீடுகளை குறுக்கீடு செய்யாதிருக்குமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு தொழிநுட்ப மதிப்பீடு மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் தள விஜயங்களும் மேற்கொள்ளப்படும்.
  6. ஒரு சில விடயங்களில், குறிப்பாக இன்னொரு நிர்வாகத்திற்கு/ நிர்வாகத்திலிருந்து இடையூறுக்கான காரணமாக இருக்கலாம் என்பதால் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு சர்வதேச அதிர்வெண் ஒருங்கிணைப்பு மற்றும் பதிவு செயன்முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அண்டைய நிர்வாகங்களுடன் ஒரு உடன்படிக்கைக்கு எட்டும் வரை குறிப்பிட்டதொரு காலம் அத்தகைய விண்ணப்பங்கள் நிலுவையில் வைத்திருக்கப்படும்.
  7. மதிப்பீடு பூர்த்தியானதும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உரிமத்தை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்கும் அல்லது குறித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை கூறி நிராகரிக்கப்படும். ஒரு உரிமத்தை நிராகரித்தமைக்கான காரணங்களை விண்ணப்பதாரி கோரினால், குறித்த காரணங்கள் அறிவிக்கப்படும்.

உரிமம் பெற்றவர்களின் பொறுப்புக்கள்

உரிமம் பெற்றவர்கள் கீழே குறிப்பிடும் நிபந்தனைகளை உறுதிப்படுத்துவது அவர்களின் பொறுப்பாகும்

  • உரிமத்தின் நிபந்தனைகளுக்குள் உபகரணத்தை இயக்குதல்
  • இடத்தில் அல்லது தொழிநுட்ப அளவுருக்களில் மாற்றங்களை ஏற்படுத்துமிடத்து அது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பது அவசியம்.
  • வானொலி உபகரணமானது வானொலி தொலைத்தொடர்பு முனைய உபகரண மாதிரி அங்கீகார விதிமுறைகளுக்கான மாதிரி அங்கீகார தேவைப்பாடுகளை பூர்த்திசெய்திருக்க வேண்டும்.
  • மாதிரி அங்கீகார விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளை பூர்த்திசெய்யும் விதததில் உபகரணம் சரியாக பராமரிக்கப்படல் வேண்டும்.
  • உபகரணத்தின் பராமரிப்பினை உரிய முறையில் பேணுவதோடு அது தொடர்பாக ஒரு பதிவேட்டினை பேணி வர வேண்டும். இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கோரும் பட்சத்தில் அப்பதிவேட்டினை வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
  • உரிமம் பெற்றவரின் தொழிநுட்ப ஆளணிக்கு அவர்களின் கடமைகளை சரிவர நிறைவேற்றும் விதத்தில் சிறந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.
  • உரிமத்தை புதுப்பிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

வானொலி தொலைத்தொடர்பாடல் உரிமங்களின் சிறப்பியல்புகள்

  • வானொலி அலைக்கற்றை உரிமங்கள் சாதாரணமாக ஒரு வருட காலத்திற்கே வழங்கப்படும்.
  • வழங்கப்பட்ட உரிமங்களின் முன்பக்கத்தில் கைச்சாத்திடப்பட்டிருக்கும். அந்த உரிமத்தில் உரிமம் பெற்றவரின் விபரங்கள், உரிம வகை மற்றும் ஒதுக்கப்பட்ட அதிர்வெண்கள், கடத்தல் சக்தி, அலைப்பட்டை அகலம், முனைப்பாக்கம் போன்ற தொழிநுட்ப அளவுருக்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
  • உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் குறிப்பீட்டு நியதிகளுடன் இணங்காத போது, குறித்த உரிமம் இரத்துச்செய்யப்படும்.
  • பாதகமான குறுக்கீடுகளை தவிர்ப்பதற்காக வானொலி நிலையங்களின் இயக்கம் மற்றும் ஒதுக்கப்பட்ட அதிர்வெண்களின் பயன்பாடு தொடர்பாக ஒரு சில தொழிநுட்பக் கட்டுப்பாடுகள் உரிமத்தில் இருக்கும். குறிப்பிட்ட உபகரணத்தின் இடம், சக்தி மற்றும் புவியியில் ரீதியான தழுவல் என்பவற்றின் அடிப்படையில் உரிமத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். உரிமம் பெற்றவர் இதற்கு முரணாக இருப்பது உரிமத்தின் நிபந்தனைகளை மீறும் செயலாகும்.
  • வானொலி அலைக்கற்றைக் கொள்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் அல்லது தேசிய/ சர்வதேச ரீதியான தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் ஒரு உரிமத்தினை (அதிர்வெண்களை வாபஸ் பெறுதல்) இரத்துச்செய்ய வேண்டியிருப்பின் ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையை கைவிடுமாறு உரிமம் பெற்றவருக்கு அறிவித்தல் வழங்கப்படும். உரிமம் பெற்றவர் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு செய்த முதலீடுகளை அங்கீகரிக்கும் வகையிலும் மாற்று தொலைத்தொடர்புகள் வசதிகளை பெறுவதற்கான நேரத்தை கருத்திற்கொண்டும் அவ்வாறு வெறுமையாக்கி காலி செய்வதற்கு 2 -3 வருடங்கள் காலக்கெடு வழங்கும்.

உரிமக் கட்டணம்

உரிமம் பெற்றிருப்பவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவற்றை மேற்பார்வை செய்யும் ஒழுங்குபடுத்தும் நிறுவனத்திற்கு நேரடி செலவுகளை ஏற்படுத்தும். இச்செலவுகளில் தரவுகளை வழங்குதல், பராமரித்தல், அலைக்கற்றைக் கண்காணிப்பு மற்றும் அதன் தனிப்பட்ட உரிமங்களை அமுல்படுத்துவதற்கான செலவுகள் என்பன உள்ளடங்கும். ஒரு சில செலவுகள் பட்டைக்கு பொதுவான செலவாகவோ அல்லது வானொலி சேவைக்கான செலவாகவோ (பட்டையையைத் திட்டமிடுவது போன்று) இருக்கும். அதே வேளை, ஏனைய சில செலவுகள் பட்டைத் தொகுதிகளுக்கான பொதுச் செலவுகளாக இருப்பதோடு இன்னும் சில செலவுகள், அதாவது முகாமைத்துவ செலவுகள் உரிமம் பெற்றிருக்கும் அனைவருக்கும் மத்தியில் பொதுவாக பகிர்ந்தளிக்கப்படும்.

உரிமக் கட்டணத்தில் அலைக்கற்றையை அணுகுவதற்கான சந்தர்ப்ப செலவுக்கு மேலதிகமான அலைக்கற்றை முகாமைத்துவத்திற்கான செலவுகளும் உள்ளடக்கப்படும். அலைக்கற்றையை வினைத்திறனுடன் பயன்படுத்துபவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகைளை வழங்குவதற்காக தற்போதிருக்கும் உரிமக் கட்டணங்கள் கால அடிப்படையில் மீளாய்விற்கு உட்படுத்தப்படும்.