முறைப்பாடுகள்
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்புகள் சட்டத்தின் (1996 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டவாறான) 09 ஆம் இலக்க உறுப்புரைக்கு அமைவாக 'தொலைத்தொடர்புச் சேவையொன்றுக்கான சந்தாக்காரர் அல்லது பொதுமக்களுள் ஒருவர், செயற்படுத்துநர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட தொலைத்தொடர்புச் சேவை தொடர்பாக அதிகாரிக்கு முறைப்பாடொன்றைச் செய்கின்றவிடத்து, அவர் அவசியமெனக் கருத்தக்கூடியவாறான நுண்ணாய்வினை அதிகாரி மேற்கொள்ளலாம் என்பதுடன், விடயத்தின் சந்தர்ப்ப சூழமைவுகள் தேவைப்படுத்தக்கூடியவாறான அத்தகைய பரிகார வழிவகைகளை எடுக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட உறுப்புரையின் கீழ் புலனாய்வின் போது முறைப்பாடு எழுவதற்குக் காரணமாக இருந்த ஏதேனும் காரணத்தை அல்லது விடயத்தைச் சீர்படுத்துவதற்கு அவசியமானதென அவர் கருதும் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாறு அத்தகைய செயற்படுத்துநரை அதிகாரி பணிக்கலாம்.
மேலே கூறப்பட்ட சட்டத்தின் 9 ஆம் உறுப்புரையின் (1) ஆம் பந்தியின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு முறைப்பாடும் எழுத்துமூலம் இருப்பதுடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும்.
முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான செயன்முறை
தொலைபேசி இணைப்பின் சட்டப்பூர்வ உரிமையாளர் முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம் என்பதையும், அது சிங்களம், ஆங்கிலம் அல்லது தமிழில் (மட்டும்) சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும். முறைப்பாட்டை முதலில் அது தொடர்பான சேவை வழங்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் நியாயமான நேரத்திற்குள் திருப்திகரமான தீர்வு கிடைக்கவில்லை என்றால், உங்கள் புகாரை TRCSL க்கு சமர்ப்பிக்கலாம்.
முறைப்பாட்டில் பின்வரும் தகவல்களை தரவும்.
- முழு பெயர்
- தேசிய அடையாள அட்டை இலக்கம்
- முறைப்பாடு தொடர்பான தொலைபேசி இலக்கம்
- தொடர்பு இலக்கம்
- சேவை வழங்குநரிடம் புகார் அளித்த தேதி
- பெறப்பட்ட பதில் ஆம் / இல்லை
- ஆம் எனில் பதிலை இணைக்கவும்
- அல்லது சேவை வழங்குநரால் வழங்கப்பட்ட குறிப்புகளைச் சமர்ப்பிக்கவும்
- முறைப்பாட்டின் சுருக்கமான விளக்கம்
- கையொப்பம்